நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காரைக்காலில் அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.

Update: 2017-09-13 23:00 GMT
காரைக்கால்.

திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டத்தின்போது அனைத்து கட்சிகளின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் 13-ந் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

காரைக்கால் மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. சார்பில் கீதாஆனந்தன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை அமைப்பாளர் ஆசைத்தம்பி, பொருளாளர் சங்கர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் கமலக்கண்ணன், கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கரன், மோகனவேலு, ராஜாராம், சோழசிங்கராயர், கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசு.வணங்காமுடி, பொன்.செந்தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் ரகீம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்