மின்விளக்குகள் எரியவில்லை என புகார்: புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி, இரவில் ஸ்கூட்டரில் சென்று ஆய்வு
புதுவையில் பெரும்பாலான இடங்களில் மின் விளக்குகள், உயர் கோபுர மின்விளக்குகள் எரியவில்லை என முதல்–அமைச்சருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
புதுச்சேரி,
புதுவையில் பெரும்பாலான இடங்களில் மின் விளக்குகள், உயர் கோபுர மின்விளக்குகள் எரியவில்லை என தொடர்ந்து முதல்–அமைச்சருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதையடுத்து முதல்–அமைச்சர் நாராயணசாமி அனைத்து பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த முடிவு செய்தார்.
அதன்படி எல்லையம்மன்கோவில் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று இரவு 8.30 மணிக்கு தது ஸ்கூட்டரில் புறப்பட்டார். அவருடன் அமைச்சர் கமலக்கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங், மின்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் ஆகியோரும் இருசக்கர வாகனங்களில் உடன் சென்றனர்.
புதுவை மிஷன் வீதி, புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, செட்டி வீதி, காந்தி வீதி, அரவிந்தர் வீதி, அண்ணா சாலை, படேல் சாலை, அக்காமடம் வீதி, ஒத்தவாடை வீதி, கருவடிக்குப்பம் மெயின்ரோடு, கிழக்கு கடற்கரை சாலை, மடுவுபேட், லாஸ்பேட்டை, வசந்தம் நகர், டி.வி.நகர், கிருஷ்ணா நகர், கொக்குபார்க், ராஜீவ்காந்தி சதுக்கம், வழுதாவூர் சாலை, மேட்டுப்பாளையம், முத்திரையர்பாளையம், கோபாலன் கடை, மூலக்குளம், ரெட்டியார்பாளையம், லெனின் வீதி, காமராஜர் சாலை, திருவள்ளுவர் சாலை, நெல்லித்தோப்பு, புதிய பஸ்நிலையம், அரியாங்குப்பம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்றார்.
அப்போது எந்தெந்த பகுதிகளில் எல்லாம் மின்விளக்குகள், உயர்கோபுர மின்விளக்குகள் எரியாமல் இருக்க காரணம் என்ன? என்பதை கேட்டறிந்தார். மேலும் எரியாமல் உள்ள மின்விளக்குகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்கள். இந்த ஆய்வு இரவு 11.30 மணி வரை நீடித்தது.