பட்டா வழங்கக்கோரி ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-13 22:45 GMT
கும்பகோணம்,

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்திற்குள் மானம்பாடி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த 50 பெண்கள் உள்பட 55 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்தேசிய பாதுகாப்பு கழகத்தின் கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் கி.சிறைச்செல்வன் தலைமையில் நேற்று கிராம மக்கள் கும்பகோணம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு தனி தாசில்தார் இல்லாததால் அலுவலகத்தில் இருந்த அலுவலர்களிடம் தாங்கள் கொண்டு வந்த மனுவை அளித்தனர்.

தமிழ்தேசிய பாதுகாப்பு கழகத்தின் கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் சிறைச்செல்வன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவிடைமருதூர் தாலுகா மானம்பாடி அம்பேத்கர் தெருவில் பல தலைமுறைகளாக நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருகிறோம். குடியிருப்பு மனையும், பட்டாவும் கேட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சை மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லாததால் மனுமுடைந்த அந்த மக்கள் அம்பேத்கர் தெருவிற்கு பின்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 24-2-2017 முதல் 4-3-2017 வரை (9 நாட்கள்) குடிசை அமைத்து அதில் வசித்து வந்தனர். இதனை அறிந்த வருவாய்துறையும், காவல்துறையும் குடிசைகளை காலி செய்யும் நோக்கில் கடந்த மார்ச் 4-ந் தேதி அன்று சம்பவ இடத்திற்கு வந்தனர். அன்று மாலை 5 மணியளவில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தாசில்தார் குடிசைகளை காலி செய்யுங்கள். உங்களுக்கு மாற்று குடியிருப்பு மனையும், பட்டாவும் 3 மாத காலத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்றுக் கொண்டு கிராம மக்கள் கடந்த மார்ச் 5-ந் தேதி குடிசைகளை அகற்றி கொண்டனர். இதையடுத்து வீட்டு மனையும், பட்டாவும் வழங்கக்கோரி தனி தாசில்தாரிடம் மார்ச் 10-ந் தேதியும், ஆகஸ்டு 2-ந் தேதியும் மனு அளிக்கப்பட்டது. மனு அளித்து 6 மாத காலத்திற்கு மேலாகியும் அம்பேத்கர் தெரு மக்களுக்கு வீட்டு மனையும், பட்டாவும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் காலம் கடத்துவது எங்கள் கோரிக்கைகளை நிராகரிக்கும் செயலாகும். எங்கள் வாழ்க்கை நெருக்கடி நிலையையும், இன்னல்களையும், துயரத்தையும் மனு மூலமும், குடிசை அமைத்து குடியேறியும் உணர்வுகளை வெளிப்படுத்தினோம். ஆனால் அரசும், ஆதிதிராவிடர் நலத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் வீட்டு மனையும், பட்டாவும் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

55 பேர்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வந்த மானம்பாடி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த 50 பெண்கள் உள்பட 55 பேர் ஆதிதிராவிடர் அலுவலகத்திற்குள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நிருபர்களிடம் சிறைச்செல்வன் கூறுகையில், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் அலட்சியமாக செயல்படும் மாவட்ட நிர்வாகம், வருவாய்துறை, ஆதிதிராவிட நலத்துறை ஆகியவற்றை கண்டித்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளோம். எனவே நாங்கள் கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கும் மக்கள் மன்றத்திற்கும் வேண்டுகோள் விடுத்து வருகிறோம் என்றார். 

மேலும் செய்திகள்