‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தி.மு.க.- தோழமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திருச்சியில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-09-13 23:00 GMT
மலைக்கோட்டை,

‘நீட்‘ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும், மாணவி அனிதா உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதாக கூறியும் நேற்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் ஜவகர் (மாநகர்), கோவிந்தராஜ் (தெற்கு), கலை (வடக்கு), ஸ்ரீதர், ராஜா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), இந்திரஜித், சுரேஷ் (இந்திய கம்யூனிஸ்டு), அருள், நீலவாணன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), அபிபுர் ரகுமான், நிஜாம் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), சேகர், ஆரோக்கியராஜ் மோகன் (திராவிடர் கழகம்), அப்துல் ரகீம், உதுமான் அலி (மனித நேய மக்கள் கட்சி) உள்பட தி.மு.க. மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் போட்டனர். மாவட்ட நிர்வாகிகள், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார்கள். கல்லூரி மாணவர்கள் சிலரும் நீட் தேர்வுக்கு எதிராக பேசினார்கள். 

மேலும் செய்திகள்