அரசு வேலைவாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் ரூ.68¼ லட்சம் மோசடி

கல்வித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் ரூ.68¼ லட்சம் மோசடியில் ஈடுபட்ட சேலம் தணிக்கை பெண் அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2017-09-13 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் ராம்நகர் அருகே உள்ள சக்திநகரை சேர்ந்தவர் சிவராஜ்(வயது26). பட்டதாரி. இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், தமிழகத்தில் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர், உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி, மேட்டூர் ராம்நகரை சேர்ந்த தமிழரசி(48), எடப்பாடி ஆலட்சிப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம்(48) ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு என்னிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் பணம் வாங்கினர். ஆனால், சொன்னபடி வேலைவாங்கி தராமல் ஏமாற்றி விட்டனர். மேலும் கொடுத்த பணத்தையும் திரும்ப தரவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தமிழரசி, சேலம் பழைய பஸ் நிலையம் அருகே இயங்கி வரும் உள்ளாட்சி தணிக்கை துறையில் ஆய்வாளராகவும், ஆறுமுகம் தாராபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருவது தெரியவந்தது.

மேலும் கல்வித்துறையில் காலியாக உள்ள பணிக்கு வேலையில் சேருவதற்காக வீரக்கல்புதூர் பேரூராட்சி முன்னாள் சேர்மனும் பா.ம.க. நிர்வாகியுமான தமிழ்வாணன், மேட்டூர் ராம்நகரை சேர்ந்த நடராஜன்(62) ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டு சிவராஜ் மற்றும் தங்கம், திலகவதி, மல்லிகா, செல்வி, தரண்யா, ராஜசேகர், சக்திவேல், முருகேசன், செந்தில், முத்துகுமார், தேவராஜன் ஆகிய 12 பேரிடம் ரூ.68 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்று பெண் அதிகாரி தமிழரசி, தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது, ஆய்வாளர், உதவியாளர், டிரைவர் என பணிக்கு தக்கப்படி ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சத்திற்கும் மேல் பணம் கொடுத்தது தெரியவந்தது.

தலைமை ஆசிரியர் ஆறுமுகம் பணத்துடன் சென்னை தலைமை செயலகத்திற்கு தமிழரசி, தமிழ்வாணன் ஆகியோருடன் சென்றுள்ளார். அங்கு அமைச்சர்கள் அலுவலகத்திற்கு வேலை தொடர்பாக பேசிவருகிறேன் என இருவரையும் அலுவலகத்திற்கு வெளியே இருக்க செய்து ஏமாற்றி அலைக்கழித்தும் வந்துள்ளார். வேலைக்காக பணம் கொடுத்த 12 பேரிடமும் தமிழ்வாணன், நடராஜன் ஆகியோர் தரகர் கமிஷனாக தலா ரூ.50 ஆயிரம் எடுத்து கொண்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி, கூட்டுசதி உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று மாலை ரூ.68 லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்த வழக்கில் உள்ளாட்சி தணிக்கைத்துறை ஆய்வாளர் தமிழரசி, தலைமை ஆசிரியர் ஆறுமுகம், இடைத்தரகர் நடராஜன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவான பா.ம.க.பிரமுகர் தமிழ்வாணனை போலீசார் தேடிவருகிறார்கள்.

முன்னதாக பெண் தணிக்கை ஆய்வாளர் தமிழரசியை கைது செய்வதற்காக போலீஸ் ஏட்டுகள் சஞ்சய்காந்தி, இருசப்பன், ராஜரத்தினம் ஆகியோர் வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டில் 27 நாய்கள், 13 பூனைகள் வளர்த்ததும் தெரியவந்தது. வீட்டிற்கு சென்ற போலீஸ் ஏட்டு ஒருவரை நாய் கடித்தது. எனவே, நாய்களை அவிழ்த்து விட்டு கடிக்க விட்டதாக இ.பி.கோ.389 பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்