வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2017-09-13 21:45 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் சி.வி.எம்.நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 28). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர் கூத்திரம்பாக்கத்தில் இருந்து சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரத்தை அடுத்த காரப்பேட்டை பகுதியில் செல்லும் போது ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு சென்ற ஒரு கார் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் முத்துப்பாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியை சேர்ந்தவர் தயாளப்பிள்ளை (55). இவர் காஞ்சீபுரத்தில் இருந்து சிறுகாவேரிப்பாக்கம் நோக்கி மொபட்டில் சென்றார். சிறுகாவேரிப்பாக்கம் அருகே வந்தபோது ஆற்காட்டில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த ஒரு தனியார் நிறுவன பஸ் தயாளப்பிள்ளை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வி.ஆர்.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (47). இவர் மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டு அருகே கடக்க முயன்றார். அப்போது பூந்தமல்லியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வேகமாக சென்ற மினி லாரி ஒன்று மோகன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

பெரியபாளையத்தை அடுத்த குமரப்பேட்டை அஞ்சாத்தம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (19). ஆரணியில் உள்ள தனியார் பள்ளி வேனில் கிளீனராக பணியாற்றி வந்தார். நேற்று காலை அவர் வீட்டில் இருந்து தனது சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். ஆரணி அருகே உள்ள சமுதாய கூடம் எதிரே வந்தபோது அந்த வழியாக வந்த லாரி திடீரென சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் உடல் நசுங்கி சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது குறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூரை அடுத்த கந்தன்கொல்லையை சேர்ந்தவர் பரமசிவம் (33). கடந்த 6–ந்தேதி பரமசிவம் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் வேப்பம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே திருவள்ளூர் நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் து£க்கி வீசப்பட்ட பரமசிவம் மற்றும் எதிரில் வந்த மற்றொரு வாகன ஓட்டியும் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்