திண்டுக்கல்லில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அனைத்து கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-09-13 23:30 GMT

திண்டுக்கல்,

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு பிறகு, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. மாணவ, மாணவிகளின் தன்னெழுச்சி போராட்டங்களும், அரசியல் கட்சிகளின் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த நிலையில், தி.மு.க. தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்து அரசியல் கட்சியினர் நேற்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன்படி, திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேசும்போது, ‘நீட்டை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். மக்கள் நலனுக்கு விரோதமாக நடைபெறும் மத்திய மற்றும் மாநில அரசுகளை அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக, சமூக நீதியை பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் அப்துல்கனிராஜா, தி.மு.க. மாவட்ட அவை தலைவர் பசீர்அகமது, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சந்தானம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அன்பரசு, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாணவி அனிதா உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்காக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் எப்படியும் நீண்ட நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போலீசார் கருதினர். ஆனால், தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் ஆர்ப்பாட்டம் முடிவு பெற்றது ஆச்சரியத்தை அளித்தது.

மேலும் செய்திகள்