கார்வாரில், கார்-லாரி மோதி கோர விபத்து ஒரே குடும்பத்தினர் உள்பட 9 பேர் பலி
கார்வாரில் கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள்.
மங்களூரு,
கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டம் எல்லாப்புரா தாலுகா அங்கோலா அருகே அரபைலு பகுதியில் நேற்று காலை 8.45 மணிக்கு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அதே சாலையில் எதிரே அங்கோலாவில் இருந்து எல்லாப்புரா நோக்கி ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது லாரி பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் கார் உருக்குலைந்தது. விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். மேலும் அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
9 பேர் பலி
ஆனால் காரின் இடிபாடுகளில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. மேலும் லாரி டிரைவர் உள்பட 4 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்கள். இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் எல்லாப்புரா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக எல்லாப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதி கேரள மாநிலம் எடப்பள்ளியில் இருந்து மராட்டிய மாநிலம் பன்வேல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்து பாதிப்பை சீர்செய்தனர்.
ஒரே குடும்பத்தில் 8 பேர்...
இதனை தொடர்ந்து பலியான 3 குழந்தைகள் உள்பட 9 பேரின் உடல்களையும், அப்பகுதி மக்களின் உதவியுடன் போலீசார் காரில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்து விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர்கள் பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகா கமல்பூர் கிராமத்தை சேர்ந்த கவுரவா வசந்த் மெட்ரி(வயது 58), விவேக் வசந்த் கட்டேஜ்(34), சச்சின் மதுகர் ஜன்டேனவர்(28), ரேணுகா(30), மேனகா(28), குழந்தைகள் வைஷ்ணவி(4), அபினவ்(3), வரதராஜ் விவேக் கட்டேஜ்(1½), கார் டிரைவர் முஜ்ஜித்(32) என்பது தெரியவந்தது.
ஆனால் விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரின் பெயர்களும் உடனடியாக தெரியவில்லை. விபத்தில் பலியான கார் டிரைவர் முஜ்ஜித்தை தவிர, மற்ற 8 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
கோவிலுக்கு சென்று திரும்பிய போது...
தொழில் அதிபரான விவேக் வசந்த் கட்டேஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் உள்ள குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு செல்ல முடிவு செய்து உள்ளார். அதன்படி வாடகை காரில் நேற்று முன்தினம் காலை கமல்பூரில் இருந்து குக்கே சுப்பிரமணியாவுக்கு சென்ற இவர்கள், சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு காரில் கமல்பூருக்கு புறப்பட்டு வந்ததும், வழியில் அரபைலு பகுதியில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதும், இதில் ஒரே குடும்பத்தினர் 8 பேர் உள்பட 9 பேர் பலியானதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விபத்தில் பலியான 9 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எல்லாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பெரும் சோகம்
கார்- லாரி மோதிய விபத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தினர் 8 பேர் உள்பட 9 பேர் பலியான சம்பவம் அரபைலு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.