பொள்ளாச்சியில் மூதாட்டி வீட்டில் 63 பவுன் நகை திருடிய 2 பேர் கைது
பொள்ளாச்சியில் மூதாட்டி வீட்டில் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி மின் நகரை சேர்ந்தவர் பாண்டிக்குமார். சம்பவத்தன்று இவரை 2பேர் தாக்கி, செல்போன் மற்றும் 1000–ம் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மரப்பேட்டையை சேர்ந்த பாண்டியன் (வயது 35), பொட்டுமேட்டை சேர்ந்த நாகராஜ் (37) என்பதும், பாண்டிக்குமாரிடம் செல்போன், பணத்தை பறித்துச்சென்றதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ராமனுஜம் வீதியை சேர்ந்த பொற்கொடி (64) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 63 பவுன் நகையை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாண்டியன், நாகராஜை பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பச்சியப்பன் அவர்கள் 2 பேரையும் 15நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.