கோவை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அரசு ஊழியர்கள்– ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Update: 2017-09-13 23:15 GMT

கோவை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். நேற்று அவர்கள் 5–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் நேற்றும் பணிக்கு செல்லாமல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அவர் போராட்டத்தின் நோக்கம் குறித்தும், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்தும் பேசினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து, பழனிசாமி, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, சத்துணவு ஊழி யர் சங்கம், சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீதித்துறை ஊழியர் சங்கம் உள்பட 27 துறைகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

நேரம் செல்ல செல்ல போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இதை யடுத்து, கலெக்டர் வளாகத்துக்குள் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு, அதற்குள் அவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்ததால் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும் உணவை சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள், அடுப்புகள் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டன. பின்னர் சமைப்பதற்கு தேவையான அரிசி, காய்கறிகளை வாங்கி வந்து, சமைக்கும் பணியில் சில நிர்வாகிகள் ஈடுபட்டனர். சில நிர்வாகிகள் இரவு நேரத்தில் அங்கு படுத்து உறங்குவதற்கு தேவையான பாய், தலையணை, போர்வை ஆகியவற்றையும் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கூறியதாவது:–

நாங்கள் ஏதோ அதிக சம்பளம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள். அது தவறு. கடந்த 2003–ம் ஆண்டுக்கு பிறகு அரசு வேலையில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. பணியில் இருக்கும்போது மட்டுமே ஊதியம் கிடைக்கிறது, ஓய்வு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் காரணமாகதான் பலர் லஞ்சம் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே எங்களின் போராட்டத்துக்கு அரசு மதிப்பளித்து, எங்களுடைய சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லை என்றால் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை விடிய விடிய நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். காவல்துறையை விட்டு எங்களை அடக்க நினைத்தாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக நேற்றும் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்காலிக ஊழியர்களை வைத்து உயர் அதிகாரிகள் பணிகளை செய்ய வைத்தாலும், ஒருசில பணிகளை மட்டும்தான் செய்ய முடிந்தது. பெரும்பாலான ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்று வருவதால் பொதுமக்கள், கொடுக்கும் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

அதுபோன்று 45 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால், பள்ளிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தற்காலிக ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்சி பள்ளியில் படிக்கும் ஆசிரிய மாணவர்களை வைத்து பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் கோர்ட்டு நுழைவு வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். நிர்வாகி கள் காளிமுத்து, அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்