கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 230 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-13 23:00 GMT
நாகர்கோவில்,

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ–ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 7–ந் தேதி தொடங்கியது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஈடுபட்டனர்.

ஆனாலும் ஜாக்டோ– ஜியோ அமைப்பின் கோரிக் கை தொடர்பாக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே கடந்த 8–ந் தேதி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்பும்படி மதுரை ஐகோர் ட்டு உத்தரவிட்டது. எனினும் போராட்டம் வாபஸ் பெறப்படவில்லை.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நேற்று தங்களது பணிகளை புறக்கணித்தனர். ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல்கள் நடத்தி பலன் இல்லாததால் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதற்காக ஏராளமான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் முன் திரண்டனர். காலையில் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால் அனைவரும் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.

பின்னர் மழை ஓய்ந்ததும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த காத்திருப்பு போராட்டத்துக்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் பகவதியப்பபிள்ளை, கனகராஜ், லீடன் ஸ்டோன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில் பங்கேற்ற ஆசிரியைகள் கையில் குடைபிடித்தபடி தரையில் அமர்ந்திருந்தனர். மதிய வேளையில் சாப்பாடும் வழங்கப்பட்டது.

காத்திருப்பு போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. நாற்காலிகளும் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 230 பேரை மதியம் 2.30 மணிக்கு பிறகு போலீசார் திடீரென கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் அடைக்கப்பட்டனர். அரசிடம் இருந்து வந்த திடீர் உத்தரவால் அனைவரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அதன்பிறகு பந்தல் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. நாற்காலிகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. முன்னதாக, ஜாக்டோ–ஜியோ அமைப்பின் காத்திருப்பு போராட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.  

மேலும் செய்திகள்