ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-13 23:00 GMT

ஊட்டி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கள் கடந்த 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 5–வது நாளாக ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பணிக்கு செல்லாமல் ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒன்று திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஊரக வளர்ச்சித்துறை சங்க நிர்வாகி சிவக்குமார் தலைமை தாங்கினார். மாரியப்பன் (ஜியோ) முன்னிலை வகித்தார். போராட்டத்தில் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதில் குன்னூர், கோத்தகிரி மற்றும் ஊட்டி தாலுகாக்களில் பணிபுரிந்து வரும் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்பட அனைத்து துறை அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 5–வது நாளாக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

இது போல், கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 5–வது நாளாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களுக்கு செல்லாமல் கூடலூர் தாலுகா அலுவலகம் முன் திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட தொடர்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வட்டார தொடர்பாளர் சலீம் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் சிவபாரத், முருகன், ஸ்ரீனிவாசன், ராஜ்குமார், செல்வி உள்பட 423 பேர் கலந்து கொண்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூறுகையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தர்ணா உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தோம். இனி வரும் நாட்களில் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர். இதனிடையே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்