ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பீரோவை தூக்கிச்சென்று 52 பவுன் நகை, பணம் கொள்ளை
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இருந்து பீரோவை தூக்கிச்சென்று 52 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரியகுளம்,
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல்ரகீம் (வயது 63). ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது சமையல் அறை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அப்துல்ரகீம் மற்றும் குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டினர். பின்னர் வீட்டில் உள்ள அறைகளை அவர்கள் நோட்டமிட்டனர்.
அப்போது மற்றொரு அறையில் பீரோ இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. பின்னர் அதில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது. இதையடுத்து பீரோவில் இருந்த துணி மற்றும் பொருட்களை கீழே போட்டுவிட்டு பீரோவை மட்டும் துக்கிச்சென்றனர்.
பின்னர் அந்த பீரோவை அப்பகுதியில் உள்ள தாமரைக்குளம் கண்மாய்க்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அதில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து உள்ளே இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர். அடுத்த நாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த அப்துல்ரகீம் அறைக்கதவை திறந்துள்ளார். ஆனால் அது வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் அவரால் திறக்க முடியவில்லை.
பின்னர் அக்கம்பக்கத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு அறைக்கதவை திறந்து வெளியே வந்து பார்த்த போது, மற்றொரு அறையில் இருந்த பீரோ மாயமாகி இருப்பதையும், அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து தென்கரை போலீசில் அவர் புகார் அளித்தார். புகாரில் தனது வீட்டில் இருந்து பீரோ கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 52 பவுன் நகை மற்றும் ரூ.55 ஆயிரம் இருந்ததாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோஜி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் திருடப்பட்ட பீரோ தாமரைக்குளம் கண்மாயில் கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு மோப்பநாய் பென்னி வரவழைக்கப்பட்டது. அது பீரோவை மோப்பம்பிடித்துவிட்டு சாலையில் சிறிது தூரம் ஓடியது.
ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து பீரோவில் பதிவான கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இருந்து பீரோவை தூக்கிச்சென்று நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.