கோவையில் கனமழை கொட்டித் தீர்த்தாலும் குளங்கள் நிரம்பவில்லை

கோவையில் தண்ணீர் வரும் வாய்க்கால்களை சீரமைக்காததால் கனமழை கொட்டித் தீர்த்தாலும் குளங்கள் நிரம்பவில்லை. இதனால் உடனடி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Update: 2017-09-13 10:30 GMT
கோவை,

வருடம் முழுவதும் வற்றாமல் ‘சிலுசிலு’வென தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்த நொய்யலில், இளைஞர்கள் துள்ளிக்குதித்து நீச்சலடித்து குளித்த நிலை இருந்தது. காலத்தின் மாற்றம், அதிகாரிகளின் அலட்சியம், ஓடைகள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் தெளிந்த நிலையில், கைகளில் அள்ளிக் குடிக்கும் வகையில் தண்ணீர் சென்ற நொய்யலில் தற்போது, அருகே செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றத்துடன் சாக்கடை கழிவுநீர் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என்று இருபருவ மழைக்காலங்களிலும் மழைப்பொழிவை பெற்று இயற்கை வளத்தோடு ஆசியாவின் தலைசிறந்த பல்லுயிர் பெருக்க பகுதி, யானைக்காடுகள், தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை போன்ற சிறப்புகளை பெற்ற கோவை அருகே உள்ள போளுவாம்பட்டி வனச்சரகத்தில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்துதான் இந்த நொய்யல் ஆறு உற்பத்தியாகிறது.

இந்த ஆறு மூலம் உக்கடம் பெரியகுளம், புதுக்குளம், குளராம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, வேடப்பட்டி குளம், குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், கங்க நாராயணசமுத்திரம், சொட்டை யாண்டிகுளம், பேரூர் செங்குளம், வாலாங்குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம், வெள்ளலூர் குளம், ஒட்டர்பாளையம் குளம், கண்ணம்பாளையம் குளம், இருகூர் குளம், நீலாம்பூர் குளம், சூலூர் பெரிய குளம், சிறிய குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.

மழைக்காலத்தில் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், வாய்க்கால்கள் மூலம் இந்த குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் பருவமழை பொய்த்ததால், மாவட்டத்தில் உள்ள குளங்கள், குட்டைகள் வறண்டன. இதனால் அவற்றை தூர்வார அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த குளங்கள் தூர்வாரப்பட்டன. ஆனால் குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை, அவைகள் தூர்வாரப்படவும் இல்லை.

இதன் காரணமாக தற்போது கோவை மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தாலும் குளங்கள் நிரம்பவில்லை. பெரும்பாலான குளங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் பாளம் பாளமாக வெடித்து, வறண்ட நிலையில் காணப் படுகிறது. இதனால் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் களை சரிசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக அவர்கள் கோவை கலெக்டரை சந்தித்து, நொய்யல் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆற்றில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை சுத்தப்படுத்தி, அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறிய தாவது:-

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் பாபநாச ஆறு, நண்டங்கரை ஆறு, வல்லத்து ஓடை, பெருமாள்கோவில்பதி ஓடை, நரசீபுரம் பெரியாறு, அட்டுக்கல் ஆறு, ஆறுமுக கவுண்டனூர் வேடச்சி ஓடை, தீத்திபாளையம் காட்டாறு, தென்கரை பெரியாத்து ஓடை, மாதம்பட்டி ஓடை, பூலுவப்பட்டி உரிப்பள்ளம் ஓடை, ஆலாந்துறை மூங்கில் பள்ள ஓடை, விராலியூர் சின்னத்துப் பள்ளஓடை, தேவராயபுரம் பெரிய ஓடை, தாளியூர் பள்ளஓடை, மருதமலை பெரிய ஓடை, சங்கனூர் ஓடை ஆகிய ஓடைகள் நொய்யல் ஆற்றில் கலக்கிறது.

இதில் பெரும்பாலான ஓடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிவிட்டன. அத்துடன் ஒருசிலர் சுயநலத்துக்காக தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஓடைகள் மீது பாதை அமைத்துவிட்டனர். இதன் காரணமாக ஆற்றுக்கு வரும் தண்ணீர் குறைந்துபோனது. மேலும் குளத்தை தூர்வாரிய அதிகாரிகள், குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை தூர்வாரி, நீர்வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை அகற்றவில்லை. முன்பு மலையில் குறைவான மழை பெய்தாலும், நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்லும். ஆனால் இப்போது ஆக்கிரமிப்பு காரணமாக கனமழை பெய்தால்கூட சிறிதளவே தண்ணீர் வருகிறது.

குளங்களுக்கு வாய்க்கால்தான் ரத்த நாளங்கள் போன்றது. இந்த வாய்க்கால்களை வருடத்துக்கு 2 முறை தூர்வார வேண்டும். அவ்வாறு தூர்வாரினால்தான் மழை பெய்ததும், குளங்களுக்கு தடையின்றி தண்ணீர் வரும். மேலும் நொய்யல் ஆற்றில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. குறிப்பாக 18 இடங்களில் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் ஆற்றில் கொஞ்சம் தண்ணீர் வந்தாலும், அது குளங்களுக்கு சென்று விடும்.

கோவையில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக சிங்காநல்லூர் குளம் நிரம்பி உள்ளது. அதுபோன்று செல்வ சிந்தாமணி குளமும் நிரம்பும் நிலையில் இருக்கிறது. கோளராம்பதி, பேரூர் செங்குளம் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில்தான் தண்ணீர் வந்துள்ளது. மற்ற எந்த குளங்களுக்கும் சொல்லும் அளவுக்கு தண்ணீர் வரவில்லை. எனவே அதற்கான காரணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து, மழைநீர் வீணாக செல்வதை தடுத்து, அதை குளத்தில் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நொய்யல் ஆற்றை மீட்பதற்காக எடுத்து வரும் நடவடிக்கை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘நொய்யல் ஆற்றுப்படுகையை இதுவரை செப்பனிடும் பணி நடந்து வந்தது. இனிமேல் அதை செய்ய முடியாது. எனவேதான் இந்த ஆற்றை மேம்படுத்த, ஆய்வு செய்யப்பட்டது. பின்பு ரூ.216 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர்வள அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கினால்தான் இந்த ஆற்றை மேம்படுத்த முடியும்’ என்றனர்.

மேலும் செய்திகள்