வியாபாரியிடம் ரூ.1¼ கோடி மோசடி; ஊழியர் சிக்கினார் ஹவாலா பணமா? போலீஸ் விசாரணை

வியாபாரியிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-12 22:28 GMT
மும்பை,

வியாபாரியிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது ஹவாலா பணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசில் புகார்


மும்பை டோங்கிரியை சேர்ந்தவர் ஜாபர்அலி (வயது52). வியாபாரி. இவரிடம் யாசின் சேக் என்பவர் வேலை பார்த்து வந்தார். வியாபாரி சம்பவத்தன்று கோவாவில் வசிக்கும் உறவினருக்கு பணப்பை ஒன்றை யாசின் சேக்கிடம் கொடுத்து அனுப்பினார்.

பின்னர் திரும்பிவந்த யாசின் சேக், பணப்பையை கோவாவில் உள்ள உறவினரிடம் கொடுத்து விட்டதாக ஜாபர்அலியிடம் தெரிவித்தார். ஆனால் கோவாவிற்கு பணப்பை சென்று சேரவில்லை என்பது தெரியவந்தது.

எனவே ஜாபர்அலி தன்னை ஏமாற்றிய யாசின் சேக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதில் தனக்கு சொந்தமான ரூ.3 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக புகார் அளித்தார்.

ஊழியர் கைது

இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து யாசின் சேக்கிடம் விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று ஜாபர் அலி கொடுத்து அனுப்பிய பையில் ரூ.1 கோடியே 25 லட்சம் இருந்ததும், இந்த பணத்தை யாசின் சேக் கொள்ளை அடித்து விட்டு நாடகமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் யாசின் சேக் பதுக்கி வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர். இதையடுத்து போலீசாரிடம் பொய்யான தகவல் கூறிய ஜாபர்அலி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்