சொத்தில் பங்கு கேட்ட முதல் மனைவி கூலிப்படையை ஏவி கொலை கணவர் உள்பட 7 பேர் கைது

விராரில் சொத்தில் பங்கு கேட்ட முதல் மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்த கணவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2017-09-12 22:11 GMT

மும்பை,

விராரில் சொத்தில் பங்கு கேட்ட முதல் மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்த கணவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீர்த்து கட்ட முடிவு

பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்தவர் நாம்தேவ்(வயது57). ரெயில்வே ஊழியர். இவரது மனைவி ரமாபாய்(54). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாம்தேவ் வேறு ஒரு பெண்ணை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்த பெண்ணுடன் பால்கரில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் ரமாபாய் மாதா மாதம் தனக்கு செலவுக்கு பணம் தரவேண்டும் எனவும், சொத்தில் பங்கு தரவேண்டும் எனவும் கணவர் நாம்தேவிடம் சண்டை போட்டு வந்தார். இது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் முதல் மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

கழுத்தை நெரித்து கொலை

இதற்காக அவர் உறவினர் பாண்டுரங்கின் உதவியை நாடினார். அவர் கூலிப்படையை வைத்து ரமாபாயை தீர்த்து கட்ட யோசனை கூறினார். இதையடுத்து 2 பேரும் ரமாபாயை கொலை செய்ய கூலிப்படையினருக்கு முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுத்தனர். மேலும் காரியத்தை கச்சிதமாக முடித்த பிறகு மேலும் ரூ.1½ லட்சம் தருவதாக கூறினர்.

இதையடுத்து சம்பவத்தன்று இரவு கூலிப்படையை சேர்ந்த பெண் வந்தனா, ரமாபாயை ஏமாற்றி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு வைத்து கூலிப்படையினர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

விபத்தால் சிக்கினர்

பின்னர் நள்ளிரவு நேரத்தில் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் ரமாபாயின் உடலை வைத்து காட்டுப்பகுதியில் வீசச்சென்றனர். அப்போது விரார் கிழக்கு, கரன்ஜான் விலேஜ் பகுதியில் சென்றபோது குண்டும் குழியுமான சாலையால் ஏற்பட்ட விபத்தால் கூலிப்படையினர் ரமாபாய் உடலுடன் கீழே விழுந்தனர். இதனால் பதற்றம் அடைந்த கூலிப்படையினர் உடலை ரோட்டில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ரமாபாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நாம்தேவ் கூலிப்படையை ஏவி மனைவி ரமாபாயை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாம்தேவ், அவரது உறவினர் பாண்டுரங் மற்றும் கூலிப்படையை சேர்ந்த சந்திரகாந்த், லெட்சுமண் கோபட், லெட்சுமண் பவார், ரகேஷ், வந்தனா ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்