கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 1,600 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 1,600 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-12 23:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட ஜாக்டோ– ஜியோ அமைப்பு சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும், 7–வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து 8–வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர்களுடன் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திடீரென திருவள்ளூர்– திருப்பதி நெடுஞ்சாலையான திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 550 பெண்கள் உள்பட 1,600 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில், அனைத்து அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள், உறுப்பினர்கள் கோர்ட்டு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காஞ்சீபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம், தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் ஜாக்டோ– ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் சுமார் 70 கோர்ட்டு ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்