பிளக்ஸ் போர்டுகளை கிழித்ததை கண்டித்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே பிளக்ஸ் போர்டுகளை கிழித்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-12 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் கடைத்தெருவில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் டி.டி.வி.தினகரன், புதிதாக அறிவிக்கப்பட்ட திருவாருர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் ஆகியோரை வாழ்த்தி 2 பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அந்த பிளக்ஸ் போர்டுகளை நேற்று முன்தினம் யாரோ சிலர் கிழித்து எடுத்து சென்று விட்டனர்.

இதை கண்டித்து ராயநல்லூர் கடைத்தெருவில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ராயநல்லூர் கிளை செயலாளர் முரளி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கோபால்ராமன், துணை செயலாளர் என்.வி.பிரசன்னா, நகர செயலாளர் தாஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

50 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு வந்து தங்க வைத்தனர். இதனால் தித்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப் பட்டது. 

மேலும் செய்திகள்