கடலூர் முதுநகரில் கடன் சுமையால் மனமுடைந்த கொத்தனார் விஷம் குடித்து சாவு, மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர் முதுநகரில் கடன் சுமையால் மனமுடைந்த கொத்தனார் விஷம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் மணக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). கொத்தனார். இவருக்கும், நடுவீரப்பட்டு சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த சீதாலட்சுமி(30) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு அபர்ணா(9), யோகஸ்ரீ(6), ஹரிணி(4) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் வெங்கடேசன் அதே பகுதியில் நடந்த கட்டிடம் கட்டும் வேலைக்கு சென்று வந்தார். இரவு தனது மனைவி மற்றும் மகள்களுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். மனைவி மற்றும் பிள்ளைகள் கண் அயர்ந்த பின்னர் வெங்கடேசன் மட்டும் எழுந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
அப்போது சத்தம் கேட்டு சீதாலட்சுமி எழுந்து பார்த்தபோது வெங்கடேசன் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தார். அருகில் பூச்சிமருந்து பாட்டில் கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவன் இல்லாத உலகத்தில் நாமும் வாழக்கூடாது என்று முடிவு செய்தார். தனது பிள்ளைகளை பற்றிக்கூட கவலைப்படாமல் திடீரென எடுத்த முடிவின்படி, கணவர் குடித்துவிட்டு மீதம் இருந்த பூச்சி மருந்தை எடுத்து சீதாலட்சுமி குடித்தார். பின்னர் அருகில் இருந்த வேட்டியால் தூக்குப்போட்டு தொங்கினார்.
இந்த சத்தம் கேட்டு எழுந்த அபர்ணா சீதாலட்சுமி தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அருகில் உள்ள தனது பாட்டியிடம் போய் கூறினார். உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பதறியடித்துக் கொண்டு ஓடோடி வந்து உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த சீதாலட்சுமியை தூக்கில் இருந்து கீழே இறக்கி சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெங்கடேசன் வீட்டின் முன்பு திரண்டனர். இது பற்றிய தகவல் அறிந்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கடன் சுமையால் மனமுடைந்த வெங்கடேசன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சீத்தாலட்சுமியும் தற்கொலை செய்து கொண்ட விவரம் தெரியவந்தது. பின்னர் வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வெங்கடேசன் மற்றும் சீதாலட்சுமியின் உறவினர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பெற்றோரின் உடல்களை பார்த்து அவர்களின் 3 மகள்களும் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. கணவன்–மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் மணக்குப்பம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சீதாலட்சுமியின் அண்ணன் ரகு கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்துகொண்ட வெங்கடேசன்–சீதாலட்சுமி தம்பதிக்கு அபர்ணா, யோகஸ்ரீ, ஹரிணி ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு ஆதரவு பெற்றோர் தான். ஆனால் அவர்கள் இருவருமே தற்கொலை செய்து கொண்டதால் அவர்களுடைய 3 பெண் குழந்தைகளும் இப்போது ஆதரவற்றவர்களாகி விட்டனர். 3 பேரும் பெண்ணாக இருப்பதால் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.