மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கூட்டத்திற்கு பா.ஜனதா எதிர்ப்பு

மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கூட்டத்திற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது.

Update: 2017-09-12 21:30 GMT

பெங்களூரு,

மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கூட்டத்திற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது.

மாநகராட்சி சிறப்பு கூட்டம்

பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் மேயர் பத்மாவதி தலைமையில் பெங்களூருவில் உள்ள மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி கமி‌ஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் பா.ஜனதாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி பேசுகையில், “நகராட்சிகள் சட்டத்தில் 16–வது பிரிவின்படி மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சிறப்பு கூட்டத்தை கூட்ட முடியாது. சில தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இது சரியல்ல“ என்றார்.

இதற்கு பதிலளித்த மேயர் பத்மாவதி, “சரக்கு–சேவை வரி திட்டம் குறித்து உறுப்பினர்களுக்கு தகவல்கள் கொடுக்க சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என்று கடந்த மாதம் நாங்கள் கூறினோம். அதன்படியே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இது சாதாரண கூட்டம் இல்லை. இதில் எந்தவித தீர்மானமும் நாங்கள் நிறைவேற்றவில்லை“ என்றார்.

அதிகாரம் முடக்கப்பட்டுள்ளது

மேயரின் இந்த பதிலை ஏற்க மறுத்த பா.ஜனதா கவுன்சிலர்கள், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் உங்களின்(மேயர்) அதிகாரம் முடக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளீர்கள்? என்பதை நீங்கள் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்?“ என்றனர். இதற்கு காங்கிரஸ் கவுன்சிலர் குணசேகர் பேசுகையில், “மாநகராட்சி கூட்டத்தை கூட்டும் அதிகாரம் மேயருக்கு உள்ளது. அதன்படி இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆனால் எந்த தீர்மானமும் நிறைவேற்ற அதிகாரம் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்“ என்றார்.

அப்போது மாநகராட்சி சட்ட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பேச வைக்கப்பட்டனர். அவர்கள் பேசும்போது, “மாதம் ஒரு முறை மாநகராட்சி மன்ற கூட்டம் கூட்டப்படுகிறது. தற்போது மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அதனால் எந்த முடிவும் இந்த கூட்டத்தில் எடுக்க முடியாது. நிதி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாது“ என்றார்.

சரக்கு–சேவை வரி திட்டம்

அப்போது பேசிய மாநகராட்சி கமி‌ஷனர் மஞ்சுநாத் பிரசாத், “இந்த சபையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களுக்கு சரக்கு–சேவை வரி திட்டம் பற்றி குழப்பம் உள்ளது. அதுபற்றி சில தகவல்களை கூற வேண்டும். குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது“ என்றார்.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி பேசும்போது, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சரக்கு–சேவை வரி திட்டத்தால் சில பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள் என்று கூறினார். இதற்கு ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து பேசினர். பதிலுக்கு பத்மநாபரெட்டியும் பேசினார். இதனால் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், பத்மநாபரெட்டிக்கு இடையே கடும் வாக்குவாதம் உண்டானது.

முற்றுப்புள்ளி வைத்தார்

அப்போது மேயர் பத்மாவதி குறுக்கிட்டு, சரக்கு–சேவை வரி திட்டம் குறித்து அதிகாரிகள் உரிய விளக்கம் அளிப்பார்கள் என்று கூறி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் செய்திகள்