போலீசார் மீது கற்களை வீசி தப்ப முயன்ற 7 பேர் துப்பாக்கி முனையில் கைது

பாகாலா அருகே போலீசார் மீது கற்களை வீசிவிட்டு தப்ப முயன்ற செம்மரக்கடத்தல் கும்பலை சேர்ந்த 7 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செம்மரங்கள், ஆட்டோ, மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2017-09-12 23:00 GMT
ஸ்ரீகாளஹஸ்தி,

சித்தூர் மாவட்டம் பாகாலா போலீசார், இன்ஸ்பெக்டர் ராமலிங்கய்யா தலைமையில், நென்ரகுண்டா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோ மற்றும் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை போலீசார் நிறுத்தும்படி கூறினர். ஆனால் அதில் வந்தவர்கள் போலீசார் மீது கற்களை வீசி விட்டு தப்பிச்செல்ல முயன்றனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் துப்பாக்கியை காண்பித்து “சரணடையுங்கள், இல்லாவிட்டால் சுட்டுவிடுவோம்” என அவர்களை எச்சரித்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம், சிவாஜி, திருப்பத்தூர் தாலுகா ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த காளியப்பன், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா மேல் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த அருள், ரஜினி மற்றும் சித்தூர் மாவட்டம் வெதுருகுப்பத்தை சேர்ந்த சுரேஷ், பிரகாஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

பறிமுதல்

மேலும் ஆட்டோ மற்றும் மோட்டார்சைக்கிளுடன் அவற்றில் இருந்த 2 செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கைதான 7 பேரிடமும் இதில் தொடர்புள்ளவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்