திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 2,250 பேர் கைது

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 2,250 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2017-09-12 23:00 GMT

திருப்பூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். அதை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கடந்த 7–ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டம் நடத்துவதற்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது. இருப்பினும் கோர்ட்டு உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 3 ஆயிரத்து 737 பேருக்கு விளக்கம் கேட்டு கல்வித்துறை அதிகாரிகள் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் இருந்து பல்லடம் ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் கயல்விழி, உதவி கமி‌ஷனர் தங்கவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன்படி 1,500 பெண்கள் உள்பட 2,250 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் இன்று (புதன்கிழமை) திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் மற்றும் சமையல் செய்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

சாலைமறியலில் போராட்டத்தின் போது, ஆண் ஊழியர்கள் 2 பேர் ரோட்டில் பிணத்தைப்போல் திடீரென்றுபடுத்தனர். அவர்களை சுற்றி பெண் ஊழியர்கள் வட்டமாக சுற்றி வந்து ஒப்பாரி வைத்தனர். தமிழக அரசு செயலற்று உள்ளது. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

 இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்