சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து மில் தொழிலாளிகள் 25 பேர் காயம்
சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து 25 மில் தொழிலாளிகள் காயமடைந்தனர்.;
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து 25 மில் தொழிலாளிகள் காயமடைந்தனர்.
பெண் தொழிலாளர்கள்நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வேனில் தினமும் மதியம் வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மதியம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி, வீரிருப்பு கிராமங்களை சேர்ந்த பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ராஜபாளையம் புறப்பட்டது. பாறைப்பட்டி கிராமம் அருகே உள்ள வளைவில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட்டபோது திடீரென்று நிலைதடுமாறி வயல்வெளியில் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்தவர்கள் அலறி துடித்தனர்.
25 பேர் காயம்அந்தவழியாக வந்தவர்கள் சங்கரன்கோவில் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். வேனில் இருந்த வீரிருப்பு கிராமத்தை சேர்ந்த சங்கையா மனைவி பூங்கொடி(வயது 35), கோட்டூர்சாமி மனைவி கலா(27), குமார் மனைவி முருகலட்சுமி(30), கருத்தபாண்டி மனைவி முத்துலட்சுமி(28) ஆகியோர் பலத்த காயத்துடன் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் செல்வம் மனைவி பேச்சியம்மாள்(27), செந்தூர்பாண்டி மனைவி பரமேஸ்வரி(35), பரமசிவம் மனைவி ராஜம்மாள்(30), வடிவேல் மனைவி பொற்கலை(26) ஆகியோர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன், டிரைவர் சுந்தர்ராஜ், சுப்புலட்சுமி, கவிதா, விஜயலட்சுமி, கோமதி, சண்முகதுளசி உள்ளிட்ட 17 பேர் லேசான காயமடைந்து சிகிச்சைபெற்று வீடு திரும்பினர். இது குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.