பாளையங்கோட்டையில் போக்குவரத்து கழக அதிகாரி வீட்டில் கதவை உடைத்து கொள்ளை
பாளையங்கோட்டையில் போக்குவரத்து கழக அதிகாரி வீட்டில் கதவை உடைத்து கொள்ளையர்கள் பொருட்களை அள்ளிச் சென்றனர்
நெல்லை,
பாளையங்கோட்டையில் போக்குவரத்து கழக அதிகாரி வீட்டில் கதவை உடைத்து கொள்ளையர்கள் பொருட்களை அள்ளிச் சென்றனர். எதிர் வீட்டிலும் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அதிகாரி வீடுபாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் சீயோன் நகர் முத்துமணி ஞானையா மகன் வின்சி (வயது 60). புள்ளியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய தம்பிகள் பிரகாஷ், பிரபாகரன், எபி. இதில் பிரகாஷ் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழில்நுட்ப பிரிவு மேலாளராகவும், பிரபாகரன் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும், எபி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள், தங்களது குடும்பத்தினருடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இதனால் சீயோன் நகரில் உள்ள வீட்டில் எப்போதாவது அவர்கள் வந்து செடிகளுக்கு தண்ணீர் தெளித்து விட்டு, பராமரிப்பு பணிகளை மட்டும் செய்து விட்டு சென்று விடுவார்கள்.
பீரோக்கள் உடைப்புஇந்த நிலையில் நேற்று காலை இந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை அறிந்த வின்சி, பிரகாஷ் ஆகியோர் சீயோன் நகர் வீட்டுக்கு விரைந்து வந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்குள்ள அறைகளின் கதவுகள் மற்றும் பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அறைகள் முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடந்தன.
நேற்று முன்தினம் நள்ளிரவில் கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்று விட்டனர். அங்கு நகை, பணம் எதுவும் இல்லை என்று தெரிகிறது. மேலும் வீட்டின் பால்கனியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். மேலும் தங்களது தடயங்களை போலீசார் கண்டுபிடித்துவிடாமல் இருக்க, வீட்டின் உள்ளே தண்ணீரை ஊற்றிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த வீட்டில் கதவை உடைப்பதற்கு கிரிக்கெட் மட்டை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மட்டை பக்கத்து வீட்டில் இருந்து எடுத்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
எதிர் வீட்டில் கைவரிசைஅதே நேரத்தில் கொள்ளையர்கள் எதிர் வீட்டிலும் கைவரிசை காட்டி உள்ளனர். எதிர் வீட்டை சேர்ந்த வின்சென்ட் டீ மாஸ்ட்டராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது வீட்டின் கதவை பூட்டாமல் சாத்தி வைத்துவிட்டு சென்று விட்டார்.
இதே கொள்ளையடித்த வீட்டில் இருந்தபடியே கொள்ளையர்கள் நோட்டமிட்டு உள்ளனர். பின்னர் வின்சென்ட் வீட்டுக்குள் நைசாக சென்று கதவை திறந்து உள்ளே புகுந்து செல்போனை திருடியுள்ளனர். அப்போது கண் விழித்த ஜாய் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். இதைக்கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் எழுந்தனர். அவர்கள் கொள்ளயைர்களை பிடிக்க முயற்சித்தனர். அவர்களிடம் இருந்த தப்பிய கொள்ளையர்கள் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் பாபுனி மற்றும் மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்கள் தடயங்களை சேகரித்தனர். அப்போது கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஒரு இரும்பு கம்பியை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
2 கிலோ மீட்டர் தூரத்தில் சட்டை வீச்சுபோலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 3–க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதற்கிடையே டீ மாஸ்ட்டர் வின்சென்ட் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஒரு சட்டை நெல்லை –நாகர்கோவில் ரோட்டில் டக்கரம்மாள்புரம் போலீஸ் சோதனை சாவடி அருகே கிடந்தது தெரியவந்தது. போலீசார் அதனையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை சாவடி கொள்ளை நடந்த வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. எனவே 2 வீட்டிலும் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் நெல்லை புதிய பஸ் நிலையம் வழியாக டக்கரம்மாள்புரம், 4 வழிச்சாலை வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்நெல்லை மாநகரில் ஆட்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் துணிகரமாக அரங்கேறி வருகிறது. நெல்லை கொக்கிரகுளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து பெண்ணை தாக்கி நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இதே போல் வீரமாணிக்கபுரம் மெயின் ரோட்டில் ஒரு டாக்டர் வீட்டில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஆலயத்துக்கு சென்றிருந்த போது வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர். இந்த நிலையில் மீண்டும் வீரமாணிக்கபுரத்தில் கொள்ளையர்கள் துணிகரமாக கைவரிசை காட்டி உள்ளனர்.
வீரமாணிக்கபுரம் சீயோன் நகரில் வங்கி மேலாளர், பி.எஸ்.என்.எல். அதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரின் மற்றொரு பகுதியில் வேய்ந்தான்குளம் அமைந்திருக்கிறது. இந்த குளத்தின் வழியாக சமூக விரோதிகள் சீயோன் நகருக்குள் எளிதாக நுழைந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே வீரமாணிக்கபுரம் சீயோன் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.