கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 1,466 ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 1,466 ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் தொடரும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர்.

Update: 2017-09-12 23:00 GMT

ஈரோடு,

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அமலில் உள்ள புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையின் படி சம்பளம் உயர்த்த வேண்டும். 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் கடந்த 7–ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

ஜாக்டோ–ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்கள் சங்கத்தினர், அரசு ஊழியர்கள் சங்கத்தினர், வருவாய்த்துறை சங்கத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஊரக உள்ளாட்சித்துறையினர், பட்டு வளர்ச்சித்துறையினர், நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் என்று பல்வேறு சங்கத்தினர் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் நேற்று முன்தினம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் அனைத்து சங்கங்களின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் வந்து கூடினார்கள். அங்கு ஈரோடு மாவட்ட அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ஜெ.பாஸ்கர்பாபு தலைமையில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் ஆனந்த கணேஷ், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் யு.கே.சண்முகம் மற்றும் அனைத்து சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஈரோடு மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து போராட்டக்குழுவினருடன் இணைந்தனர்.

பின்னர் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து போராட்டக்குழுவினர் ஊர்வலமாக புறப்பட்டு பன்னீர்செல்வம் பூங்கா பகுதிக்கு சென்றனர். பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் அனைவரும் நடுரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து தாலுகா அலுவலக நுழைவு வாயில் வரை ஆசிரிய–ஆசிரியைகள், அனைத்து துறை அரசு ஊழியர்கள் நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும், நீட் தேர்வினை ரத்து செய்யவும் கோரி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் பிரப்ரோடு, கச்சேரி வீதி பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ராஜகுமார், கோபிநாத், முருகன் ஆகியோர் விரைந்து வந்து மறியல் போராட்டம் நடத்த அனுமதி மறுத்து தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி போராட்டம் நடந்தது.

எனவே போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேன்கள் மற்றும் பஸ்களில் ஏற்றினார்கள். அப்போது நிர்வாகிகள் சிலர் வாகனங்களில் ஏற மறுத்ததால் போலீசாருக்கும் போராட்டக்குழுவினருக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக முக்கிய நிர்வாகிகள் தலையிட்டு சமாதானம் செய்தனர்.

போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றதால் சி.எஸ்.ஐ. பிரப் அரங்கு, ஆயிரம் வைசியர் திருமண மண்டபம், பெரியார் மன்றம் என 3 இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மொத்தம் 966 பெண்கள் உள்பட 1,466 ஆசிரியர்–அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே போராட்டக்குழுவினர் மத்தியில் ஜாக்டோ–ஜியோ மாவட்ட அமைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவருமான பாஸ்கர் பாபு பேசும்போது, ஜாக்டோ–ஜியோவின் முக்கிய கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அறிவித்தார்.

தொடர் போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. முக்கிய அலுவலகங்கள் பலவும் மூடப்பட்டு இருந்தன.

இதுபோல் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் ஆசிரிய–ஆசிரியைகள் இல்லாததால் மாணவ–மாணவிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்படவில்லை. சில பள்ளிக்கூடங்களில் சத்துணவு அமைப்பாளர்கள் மாணவ–மாணவிகளை கவனித்துக்கொண்டனர். அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரிய–ஆசிரியைகள் மாற்றுப்பணியாளர்களாக அரசு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தனர். பள்ளிக்கல்வித்துறை பள்ளிக்கூடங்களில் நேற்று முதல் பருவ தேர்வுகள் நடந்தன. வேலை நிறுத்த போராட்டத்தால் தேர்வுகளில் எந்த பாதிப்பும் இல்லை.

கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் 1,909 ஆசிரிய–ஆசிரியைகள் மட்டுமே பணிக்கு வரவில்லை. இதுபோல் அலுவலக பணியாளர்கள் 110 பேர் மட்டுமே வரவில்லை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் 76 சதவீதம் அரசு ஊழியர்கள் பணிக்கு வந்திருந்ததாகவும், வருவாய்த்துறையில் மட்டும் 60 சதவீதம் பேர் வேலை நிறுத்தம் செய்ததாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்