குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுக்காததால் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி
கம்பம் அருகே அரிவாளால் வெட்டி அண்ணன் கொலை தம்பியை போலீசார் கைது செய்தனர். தனது குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுக்காததால் தம்பி ஆத்திரத்தில் இந்த கொலையை செய்துள்ளார்.
உத்தமபாளையம்,
கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 40). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (39). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக சித்ரா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மாரிச்சாமி தனது தம்பிகளான சரவணன் (35),சுருளிவேல் (32) ஆகியோர் வீடுகளில் சாப்பிட்டு வந்துள்ளார்.
நேற்று மாலையில் சரவணனின் மகன் மருதுபாண்டியை (11) கடைக்கு அழைத்து சென்று மாரிச்சாமி மிட்டாய் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அவனை வீட்டுக்கு அழைத்து வந்த போது சுருளிவேல் அவரை வழிமறித்தார். பின்னர் எனது குழந்தைக்கு ஏன் மிட்டாய் வாங்கி கொடுக்கவில்லை என்று கூறி தகராறு செய்துள்ளார். இதையொட்டி 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுருளிவேல் தனது வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து தனது அண்ணன் என்றும் பாராமல் மாரிச்சாமியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உத்தமபாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இத்திரிஸ்கான் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாரிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுருளிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தனது சொந்த அண்ணனை வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.