தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள்– ஆசிரியர்கள் சாலை மறியல்; 850 பேர் கைது

தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்– ஆசிரியர்கள் 850 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-12 21:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்– ஆசிரியர்கள் 850 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8–வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதுவரை 1.1.2016 முதல் 20 சதவீதம் இடைகால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடங்கிய ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. நேற்று 6–வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்பு நேற்று காலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பிரான்சிஸ் ஹென்றி, தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஜெயபால் பி.ராயர், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் பூசைத்துரை ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

850 பேர் கைது

அதனை தொடர்ந்து தூத்துக்குடி– பாளையங்கோட்டை ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 450 பெண்கள் உள்பட 850 பேரை கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்