கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டம் 965 பேர் கைது

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-12 23:00 GMT

சிவகங்கை,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து புதிய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்தி காலமுறை ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3 கட்டமாக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக நேற்று முன்தினம் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று 2–வது கட்டமாக நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், இளங்கோ, தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 515 பெண்கள் உள்பட 965 பேரை சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தொடர் போராட்டத்தில் இன்று(புதன்கிழமை) 3–ம் கட்டமாக கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்