3 நாட்கள் விடுமுறைக்கு பின்பு கல்லூரிகள் திறப்பு: வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நேற்று கல்லூரிகள் திறந்த நிலையில், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-12 02:00 GMT

சென்னை,

‘நீட்’ தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதா மனவேதனையில் கடந்த 1–ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.

குறிப்பாக சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம், சாலை மறியல் போராட்டம் என போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த சென்னையில் உள்ள சில கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

3 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று(திங்கட்கிழமை) கல்லூரிகள் மீண்டும் திறந்தன. மாணவர்கள் வழக்கம் போல் கல்லூரிகளுக்கு வந்தனர். ஆனால் அவர்கள் வகுப்பறைகளுக்குள் போகாமல், வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 50–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசிற்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

அதேபோல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 300 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் 200–க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கூறியதாவது:–

மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. இந்த நீட் தேர்வால் பல ஏழை மாணவ, மாணவிகளின் ‘மருத்துவர்’ கனவு தகர்ந்துள்ளது.

தற்போது, நடைபெற்ற நீட் தேர்வில் மிக, மிக சொற்ப அளவிலே கிராமத்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலாக, வசதி படைத்தவர்களும், அரசு அதிகாரிகளின் பிள்ளைகளும் தான் பெருமளவில் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்