தாராவியில் புதுப்பெண் மர்மச்சாவு கணவர் உள்பட 3 பேர் கைது

தாராவியில் புதுப்பெண் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2017-09-11 22:07 GMT
மும்பை, 

மும்பை தாராவி சதாப்தி நகரை சேர்ந்தவர் துஷார் காம்பிளே(வயது25). இவரது மனைவி பூஜா(22). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகி இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் பூஜா மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். பூஜாவின் பெற்றோர் தங்கள் மகளை துஷார் காம்பிளேவின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும், பூஜாவை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் பூஜாவின் உறவினர்கள் தாராவி போலீஸ் நிலையம் முன் திரண்டு துஷார் காம்பிளே மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாக கைது செய்யும்படி புகார் கொடுத்தனர்.

3 பேர் கைது

இந்தநிலையில், பூஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் கூறினர். பூஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் அவரது கணவர் துஷார் காம்பிளே மற்றும் மாமனார் பிரதீப் ராம்சந்திர காம்பிளே, மாமியார் பிரதிக்‌ஷா(49) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்