எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ் ஆகியோருக்கு மேக்கப்மேனாக இருந்தவர் சாலையோரத்தில் இறந்து கிடந்தார்
எம்.ஜி.ஆர்., எம்.டி.ராமாராவ் ஆகியோருக்கு மேக்கப்மேனாக இருந்தவர் சாலையோரத்தில் இறந்து கிடந்தார்.
பாலக்காடு,
பாலக்காட்டை அடுத்துள்ள ஒற்றபாலம் அம்பலபாறை புளியகுன்னு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 85). இவருடைய மனைவி கவுரி. இவர்களுக்கு இந்திரா என்ற மகளும், ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். பத்மநாபன் மறைந்த முன்னாள் தமிழக முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர்., மறைந்த ஆந்திர முதல்–மந்திரியும், நடிகருமான என்.டி.ராமாராவ் ஆகியோருக்கு மேக்கப் மேனாக இருந்து வந்தார்.
கவுரி தனது மகன், மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனால் பத்மநாபன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் அந்த பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி சாலையோரத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
அந்த வழியாக நடந்து சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஒற்றப்பாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பத்மநாபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.