தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரெயிலில் அடிபட்டு தி.மு.க. பிரமுகர் பலி

தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரெயிலில் அடிபட்டு தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-09-12 01:15 GMT

பழனி,

பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி (வயது 55). இவர் பழனி ஒன்றிய தி.மு.க. பிரமுகர். இவருக்கு சொந்தமான தோட்டம் பெரியஆவுடையார் கோவில் அருகே உள்ளது. இவர் தினமும் தோட்டத்துக்கு அந்த பகுதியில் உள்ள தண்டவாளம் வழியாக செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று காலை கருப்புச்சாமி தோட்டத்துக்கு தண்டவாளத்தின் வழியாக நடந்து சென்றார். அப்போது பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கி ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனை கருப்புச்சாமி கவனிக்காமல் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனி ரெயில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கருப்புச்சாமிக்கு ஈஸ்வரி என்ற மனைவியும் பஞ்சு, வித்யா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்