3–வது நாளாக போராட்டம்: 2 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

கடலூர் மாவட்டத்தில் 3–வது நாளான நேற்று 2 ஆயிரத்து 33 அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர்.

Update: 2017-09-11 23:15 GMT

கடலூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த 7–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த போதிலும் தடையை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 3–வது நாளாக நடைபெற்றது. இந்த போராட்டத்தால் வணிகவரித்துறை, நிலஅளவைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஊரக வளர்ச்சித்துறையில் 35 சதவீதம் பேரும், வருவாய்த்துறையில் 11.67 சதவீதம் பேரும், ஆசிரியர்களில் 12.52 சதவீதம் பேரும், நிலஅளவைத்துறையில் 35.66 சதவீதம் பேரும், வணிகவரித்துறை ஊழியர்களில் 78.21 சதவீதம் பேரும், தோட்டக்கலைத்துறையில் 15 சதவீதம் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

இதர அரசு துறைகளில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தத்தில் 554 அரசு ஊழியர்களும், 1,479 ஆசிரியர்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 33 பேர் வேலை நிறுத்தம் செய்தனர்.

பள்ளிக்கூடங்களில் 11 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நேற்று தொடங்கியது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தப்போராட்டதால் தேர்வுப்பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட கல்வி அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். எனினும் தேர்வுப்பணிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு வரும் வகையில் தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்ததால் தேர்வுப்பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆனால் பங்களிப்பு ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் பெருமளவில் போராட்டத்தில் பங்கேற்றதால் தொடக்கப்பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தொடக்கக்கல்வித்துறையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. இதர அரசு துறைகளில் பணிக்கு வராதவர்களுக்கும் நோட்டீசு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

இதுபற்றி கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 7–ந்தேதி 3,666 பேரும், 8–ந்தேதி 2,600 பேரும், இன்று(அதாவது நேற்று) 2,033 பேரும் பணிக்கு வரவில்லை. வேலை நிறுத்தத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்திருப்பதால், பணிக்கு வராதவர்களுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நோட்டீசுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்