பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.;

Update: 2017-09-11 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் கரூர் பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சரவணன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தொடர்ந்து அவர்கள் மனு குறித்து கூறுகையில், “தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கரூர் மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் முதலீடு செய்தோம். பல்வேறு திட்டங்களில் முதிர்வு காலம் முடிந்த பின்னும் முதிர்வு தொகை திரும்ப தரவில்லை. பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். அந்த நிதி நிறுவனத்தை 3 பேர் சேர்ந்து நடத்தி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தோம். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் மீண்டும் மனு கொடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என முடிவு செய்துள்ளோம்” என்றனர்.

ஓட்டுனர் உரிமம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், “வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதில் சிரமம் உள்ளது. இதனால் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

தும்பிவாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தங்களது பகுதியில் தேங்காய் சிரட்டைகளை எரித்து கரி எடுக்கும் தனியார் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் பாதிப்படைவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கூறியிருந்தனர்.

வீட்டுமனை பட்டா

இதேபோல வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக மக்கள் அதிக அளவில் வருவது உண்டு. இந்த நிலையில் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது. 

மேலும் செய்திகள்