புதிய ஓய்வூதிய திட்டம்–நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டம்–நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நடுரோட்டில் உட்கார்ந்து கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2017-09-11 23:15 GMT

ஈரோடு,

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரிய–ஆசிரியைகள், அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையின் படி சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், உள்ளாட்சித்துறையினர், வருவாய்த்துறையினர் என்று அனைத்து துறை பணியாளர்கள், ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை.

நேற்று மீண்டும் ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே எழுப்பப்பட்ட 3 முக்கிய கோரிக்கைகளுடன் 4–வதாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து போராட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத்துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈரோடு சம்பத்நகரில் உள்ள கொங்கு கலையரங்கம் முன்பு கூடினார்கள். அங்கு தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அனைவரும் சம்பத்நகர்–கலெக்டர் அலுவலக சாலையில் நடுரோட்டில் உட்கார்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ஆனந்தகணேஷ், கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சாரதாம்பாள், உஷா உள்பட பலர் பேசினார்கள். முன்னாள் தலைவர்கள் கே.ராஜ்குமார், மணிபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் ஈரோடு மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஜாக்டோ–ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் கோர்ட்டு வளாகத்தில் நீதித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்று ஜாக்டோ–ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டம் காரணமாக நேற்று ஈரோட்டில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை யாரும் பணிக்கு வராததால் அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. சில அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெறும் நிலையில் உள்ள பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதனால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. கோர்ட்டில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் வழக்கு விசாரணை நடந்தது.

மாவட்டத்தில் நேற்று அனைத்து பள்ளிக்கூடங்களும் இயங்கின. பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை 4 ஆயிரத்து 280 ஆசிரியர்களில் 3 ஆயிரத்து 359 பேர் பணிக்கு வந்திருந்தனர். 684 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை. இதில் 237 பேர் ஏற்கனவே விடுமுறையில் இருப்பவர்கள். எனவே பள்ளிக்கல்வித்துறை பள்ளிக்கூடங்களில் பெரிய பாதிப்பு இல்லை. மேலும் நேற்று அறிவிக்கப்பட்ட படி முதலாம் பருவ தேர்வுகள் எந்த பாதிப்பும் இன்றி நடந்து முடிந்தன.

தொடக்கக்கல்வித்துறையை பொறுத்தவரை மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 137 ஆசிரியர்களில் நேற்று பணிக்கு வராதவர்கள் 1,055 பேர் மட்டுமே. இதுபற்றி மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி (பொறுப்பு) முத்துகிருஷ்ணன் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தால் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் இல்லை. குறிப்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியதால் 80 சதவீதம் பேர் வேலைக்கு வந்திருந்தனர். கடந்த 7 மற்றும் 8–ந் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்தவர்களுக்கு தமிழக அரசின் உத்தரவுப்படி ஏன் பணிக்கு வரவில்லை என்ற விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 2 ஆயிரத்து 732 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது எந்தவித நடவடிக்கை என்று அறிவித்த உடன் எடுக்கப்படும். தொடக்கப்பள்ளித்துறை வகுப்புகளுக்கு வருகிற 18–ந் தேதிதான் தேர்வுகள் தொடங்குகின்றன. எனவே வேலை நிறுத்த போராட்டத்தால் பாதிப்புகள் எதுவும் இல்லை’ என்றார்.

இதற்கிடையே இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், நாளை (புதன்கிழமை) முதல் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்