சென்னிமலை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை

சென்னிமலை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-11 22:45 GMT

சென்னிமலை,

சென்னிமலையில் இருந்து உப்புலிபாளையம் செல்லும் ரோட்டில் சுடுகாட்டுக்கு அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் கடை நேற்று மதியம் 12 மணி அளவில் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மது விற்பனை தொடங்கியது.

இதுபற்றி அறிந்ததும் டாஸ்மாக் கடை அருகில் உள்ள மணிமலை கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு 1 மணி அளவில் மதுக்கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் டாஸ்மாக் கடையை அந்த பகுதியில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் கூலித்தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். வேலை முடிந்து மாலை வேளைகளில் உப்புலிபாளையம் ரோட்டின் வழியாகத்தான் ஊருக்கு வருவார்கள்.

மேலும் எங்கள் ஊரில் உள்ள ஏராளமான மாணவ–மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுவிட்டு இதே ரோட்டின் வழியாகத்தான் வருகிறார்கள்.

இதனால் இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளதால், மது குடிக்க வருபவர்களால் கூலித்தொழிலாளர்கள், மாணவ–மாணவிகளுக்கு இடையூறு ஏற்படும். எனவே இங்கு டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது. உடனே அதை மூட வேண்டும்,’ என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடை அறிவிப்பு பலகையை பொதுமக்கள் அப்புறப்படுத்த முயன்றனர். உடனே போலீசார் அதை தடுத்து நிறுத்தினர். பின்னர் பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், ‘டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து மாவட்ட கலெக்டர்தான் முடிவு எடுக்க வேண்டும். எனவே உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி மாவட்ட கலெக்டரிடம் கொடுங்கள்,’ என்றனர்.

ஆனால் இதை பொதுமக்கள் ஏற்க மறுத்ததுடன், கண்டிப்பாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தியபடி இருந்தனர். இதனால் டாஸ்மாக் கடையை மூட போலீசார் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. கடை மூடப்பட்டதும் பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது 10–க்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் அங்கு வந்தனர். உடனே அவர்கள் அங்கிருந்த போலீசாருடன் ‘டாஸ்மாக் கடையை கண்டிப்பாக இங்கு திறக்க வேண்டும். நாங்கள் மது வாங்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் எங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. நேரமும் வீணாகிறது. எனவே டாஸ்மாக் கடையை மூட வேண்டாம்,’ என்று கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்