விவசாயியை அடித்துக்கொன்ற வழக்கு: தம்பதிக்கு ஆயுள் தண்டனை அண்ணனுக்கு 3 ஆண்டு சிறை

விவசாயியை அடித்துக்கொன்ற வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த விவசாயியின் அண்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2017-09-12 02:15 GMT

தேனி

விருதுநகர் மாவட்டம் முத்துலிங்கபுரத்தை சேர்ந்தவர் போஜராஜ் (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி பாக்யலட்சுமி (48). கணவன்–மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து போஜராஜ் தேனி மாவட்டம் தேவாரத்துக்கு கடந்த 2012–ம் ஆண்டு வந்தார். பின்னர் அப்பகுதியை சேர்ந்த ரெங்கநாதன் (55) என்பவர் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார். மேலும் போஜராஜின் அண்ணன் அமிர்தராஜ் அதே பகுதியில் குடும்பத்தினருடன் வசிக்கிறார். இந்த நிலையில் போஜராஜ், மனைவி மீது உள்ள கோபத்தில் தனக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை ரெங்கநாதன் பெயருக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் 30–ந்தேதி போஜராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக அவருடைய மனைவி பாக்யலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருடைய உடலை ரெங்கநாதன், அவருடைய மனைவி அழகம்மாள் (49), அமிர்தராஜ் ஆகியோர் முத்துலிங்கபுரத்துக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே பாக்யலட்சுமிக்கு கணவர் சாவில் சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் அவர் தேவாரம் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று போஜராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், அவருடைய மர்ம உறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ரெங்கநாதன், அழகம்மாள் ஆகியோர் போஜராஜை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது, போஜராஜ் தனது நிலத்தை ரெங்கநாதனுக்கு எழுதிக்கொடுத்திருந்த நிலையில் மீண்டும் தனக்கு திரும்ப தரும்படி கேட்டுள்ளார். இதனால் கணவனும், மனைவியும் அவரை அடித்துக்கொன்றதும், இந்த கொலைக்கு அமிர்தராஜ் தம்பதிக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு குறித்த விசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமரேசன் வழக்கின் தீர்ப்பை நேற்று கூறினார். அதில், ரெங்கநாதன், அழகம்மாள் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,500 அபராதமும், அமிர்தராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை பெற்ற 3 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்