கோவையில் 3–வது நாளாக அரசு ஊழியர்கள்– ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

கோவையில் நேற்று 3–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-09-11 23:00 GMT

கோவை,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ– ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 7–ந் தேதி முதல் போராட்டத்தை தொடங்கினார்கள். நேற்று 3–வது நாளாக அந்த அமைப்பு சார்பில் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்காக, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பலர் நேற்று காலையில் வேலைக்கு செல்லவில்லை. அவர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டம் மதியம் 1 மணி வரை நடந்தது.

இதற்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கிராம சுகாதார செவிலியர்கள் சங்க மாநில தலைவர் பரமேசுவரி முன்னிலை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கருப்புசாமி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் செந்தூரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகராட்சி பள்ளிகள் ஆசிரியர் கூட்டமைப்பு சங்கம் சார்பில் ஸ்ரீதர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் ரமேஷ் உள்பட வருவாய்த்துறை, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம், சத்துணவு ஊழியர்கள் சங்கம், வணிகவரித்துறை, நெடுஞ்சாலைத்துறை, அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் உள்பட 27 துறைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க வந்த பொதுமக்கள், அலுவலகத்தில் யாரும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

ஆசிரியர்களை பொறுத்தவரை 40 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றனர். இதன் காரணமாக சிறப்பு ஆசிரியர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் ஆசிரிய மாணவ–மாணவிகள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்களை கொண்டு மாணவ–மாணவிகளுக்கு பாடம் எடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் குறித்து கோவை மாவட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:–

கோவை மாவட்டத்தில் நேற்று 3–வது நாளாக நடந்த போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் பணிக்கு செல்லவில்லை. எங்கள் போராட்டத்துக்கு கோர்ட்டு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், எங்களிடம் விளக்கம் கேட்டு, அதற்கு 14–ந் தேதிக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

எனவே மாநில மையம் சார்பில் கோர்ட்டுக்கு பதில் கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் கோவை கோர்ட்டு நுழைவு வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் கருணாகரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். இதில் மாவட்ட நிர்வாகிகள் காளிமுத்து, பழனிசாமி உள்பட அந்த சங்கத்தை சேர்ந்த கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்