அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது 4 இடங்களில் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ–ஜியோ அமைப்பின் ஒரு பிரிவுகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-09-11 23:00 GMT
விருதுநகர்,

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பின் ஒருபிரிவினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7–ந்தேதி வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதற்கிடையில் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்ட நிலையில் வேலை நிறுத்தம் செய்யும் அனைவரும் உடனடியாக வேலைக்கு திரும்பும்மாறு தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனாலும் கடந்த 8–ந்தேதி வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இடையில் சனி, ஞாயிறு விடுமுறைநாட்களை அடுத்து நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் 816 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில் 330 பேர் பெண்கள். மொத்தம் உள்ள ஆசிரியர்களில் 6.9 சதவீதம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 2600 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். இதில் 1490 பேர் பெண்கள். மொத்தம் உள் அரசு ஊழியர்களில் 15.7 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு சில அரசு அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.

5–ம் அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பும், காரியாபட்டி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 400 பெண்கள் உள்பட 800 பேர் கலந்து கொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை 19.4 சதவீத அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று 15.7 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்