‘குருவையும், சுக்கிரனையும் ஒருசேர வழிபட்டால் குடும்ப முன்னேற்றம் கூடும்’ சிவல்புரி சிங்காரம் பேச்சு

குருவையும், சுக்கிரனையும் சேர்த்து வழிபட்டால் குடும்ப முன்னேற்றம் கூடும் என்று காரைக்குடி அருகே நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் செட்டிநாடு கிரிவல குழு தலைவர் சிவல்புரி சிங்காரம் கூறினார்.;

Update:2017-09-12 04:15 IST
சிவகங்கை,

காரைக்குடி அருகே மாத்தூரில் உள்ளது ஐநூற்றீஸ்வரர்-பெரியநாயகி அம்மன் கோவில். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் மாப்பிள்ளை நந்தி பிரசித்தி பெற்றது. திருமணமாகாத நபர்களுக்கு அந்த நந்தியை வழிபட்டால் விரைவில் திருமணமாகும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்த ஆன்மிக நிகழ்ச்சிக்கு செட்டிநாடு கிரிவல குழு தலைவர் சிவல்புரி சிங்காரம் தலைமை தாங்கினார். மாத்தூர் கோவில் தலைவர் அக்ரி சொக்கலிங்கம், நிர்வாகிகள் குழுவை சேர்ந்த செந்தில்நாதன், ஏகப்பன், பெத்த பெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக சிவல்புரி சிங்காரத்தின் ஆன்மிக சேவையை பாராட்டி அக்ரி சொக்கலிங்கம் பொன்னாடை அணிவித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் சிவல்புரி சிங்காரம் கூறியதாவது:- குருபகவான் இந்த ஆண்டு தனக்கு பகை கிரகமான சுக்கிர பகவான் வீட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். எனவே நாட்டிலும் சரி, வீட்டிலும் சரி எண்ணற்ற பிரச்சினைகள் தோன்றியிருக்கலாம். நிம்மதி கிடைக்க வேண்டுமானால் அவரது சன்னதியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வழிபாடு நடத்துவதோடு, நவ கிரகத்தில் உள்ள சுக்கிரனையும் சேர்த்து வழிபட வேண்டும். எதிரியையும் வசமாக்கிக் கொண்டால் தான் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக மேஷம், மிதுனம், விருச்சிகம், கும்பம், தனுசு ஆகிய ராசிகள் மிகுந்த நற்பலன்களை பெறுகின்றன. எந்த ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும், குருவருள் இருந்தால் தான் திருவருள் கிடைக்கும்.

திருமணம் முடிவடைய பச்சைக்கொடி காட்டுபவர் குருபகவான். வாரிசு பிறக்க வேண்டும் என்றாலும், வாழ்க்கை வளமானதாக அமைய வேண்டும் என்றாலும் வரம் கொடுக்க வேண்டியவர் குருபகவான் தான்.

சகல வசதிகளையும் கொடுப்பவர் சுக்கிர பகவான். எனவே குரு, சுக்கிரன் ஆகிய இரண்டையும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை வழிபட்டால் குடும்ப முன்னேற்றம் கூடும். குதூகலம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்