குழந்தைகள் மீதான பாலியல் கொடுமையை தடுக்க கன்னியாகுமரி–டெல்லிக்கு விழிப்புணர்வு யாத்திரை

குழந்தைகள் மீதான பாலியல் கொடுமையை தடுக்க கன்னியாகுமரி– டெல்லிக்கு விழிப்புணர்வு யாத்திரையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

Update: 2017-09-11 22:45 GMT

கன்னியாகுமரி,

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் கைலாஷ் சத்யார்த்தி. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகள் கடத்தல் போன்றவற்றை தடுக்கவும் அதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை யாத்திரை நடத்தவும் கைலாஷ் சத்யார்த்தி திட்டமிட்டார். அதன்படி இந்த யாத்திரை தொடக்கவிழா நேற்று காலை கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நடந்தது. சிக்காகோவில் விவேகானந்தர் உடையாற்றிய தினமான நேற்று இந்த யாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மத்திய மத்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு யாத்திரையை தொடங்கிவைத்து கைலாஷ் சத்யார்த்தியை பாராட்டியும் பேசினார்.

அப்போது, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைலாஷ் சத்யார்த்தியின் இந்த விழிப்புணர்வு யாத்திரை பாராட்டத்தக்கது என்றார்.

கைலாஷ் சத்யார்த்தி பேசும்போது நாட்டில் ஒரு ஆண்டில் 1 லட்சம் குழந்தைகள் மாயமாகிறார்கள். 6 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வீதம் மாயமாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. குழந்தைகள் உரிமைகள் காக்கவும், பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கவும் இந்த நெடும்பயணம் உதவி செய்யும் என்றார்.

இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், வள்ளளார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் இருந்து விழா பொதுக்கூட்டம் நடைபெறும் புனித அந்தோணியார் பள்ளி மைதானம் வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது. இதில் நையாண்டி மேளம் உள்பட கிராமிய கலை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் கண்கவரும் விதத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரஜினி ரசிகர்களும் பங்கேற்றனர். அவர்கள் கைகளில் ரஜினிகாந்தின் படத்துடன் கூடிய குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளையும் வைத்திருந்தனர்.

பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், கடத்தல், கட்டாய வேலையில் தள்ளுதல் போன்ற நிழ்வுகளுக்கு எதிராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்தி நடத்துகின்ற பாரத யாத்திரை சிறப்படைய வாழ்த்துகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மனிதகளிலும் மிருகங்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மிருகங்கள் குழந்தைகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அவமானப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் தடுப்பதற்காக கைலாஷ் சத்தியார்தி யாத்திரை செல்கின்றார். இந்த யாத்திரையை ஒரு போராட்டகளமாக அவர் எடுத்து செல்கின்றார். அவருடைய இந்த போராட்டத்தில் நீங்கள் அத்தனை பேரும் கலந்துகொள்ள வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கத்தின் அருகில் சென்றால் கொன்றுவிடும் அதேபோல் புலி, யானை, நாய் போன்ற மிருகங்கள் என்ன பன்னும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு பிறவி மட்டும் என்ன பன்னும் என்று கணிக்க முடியாத பிறவி இந்த மனித பிறவி. இந்த மனிதனுக்குள்ளே சிங்கம், புலி, யானை என எல்லாமே இருக்கிறது. இதற்குள்ளே மனிதனை தேட வேண்டும் என்பதற்காகதான் நாம் பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். குழந்தைகள் துணிச்சல் மிக்கவர்களாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு வன்கொடுமை நடந்தாலும் கூட, குழந்தைகளிடம் யார் தவறாக பழகுவதற்கு முயன்றாலும் கூட அதை எதிர்த்து போராடக்கூடிய வல்லமை படைத்தவர்களாக குழந்தைகள் உருவாக வேண்டும். இதற்காகத்தான் கைலாஷ் சத்தியார்த்தி இந்த யாத்திரையை தொடங்கி இருக்கின்றார்.

இதற்கு முன்பு பல பேர் நமது நாட்டில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். ரவீந்திரநாத் தாகூர், அன்னை தெரசா, தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன் போன்றவர்கள் எல்லாம் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சந்திக்கக்கூடிய பாக்கியம் நம்முடைய குழந்தை செல்வங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்தியை நாம் போய் சந்திக்கக்கூடிய பாக்கியத்தை தராமல், அவர் நம்மை சந்திக்கக்கூடிய பாக்கியத்தை பெற்றிருக்கிறோம்.

நாடு முழுவதும் 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து 22 மாநிலங்களில் இருக்கக்கூடிய குழந்தைகளையெல்லாம் சந்திக்க போகிறார். நாம் ரொம்ப பாக்கியம் செய்தவர்கள். அவரை சந்திக்கக்கூடிய முதல்வாய்ப்பு குமரி மாவட்டத்தில் உள்ள நமக்கு கிடைத்திருக்கிறது.

அடுத்த மாதம் 16–ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இந்த யாத்திரை நிறைவு பெற இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகளின் நலனிலே அதிக அக்கறை கொண்டவர். குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. அப்படிப்பட்ட பிரதமர் போன்றவர்கள் எல்லாம் கைலாஷ் சத்தியார்தி–க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்கள். இந்த யாத்திரை வெற்றிபெற பிராத்திக்கிறேன்.

இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் சாமிதோப்பு பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், முன்னாள் எம்.எல்.ஏ. முகம்மது இஸ்மாயில், டாக்டர் அருன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்