ஓடும் ரெயிலில் திடீர் மூச்சுத் திணறலால் பெண் பயணி உயிரிழப்பு

ஓடும் ரெயிலில் பயணித்த பெண் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தார்.

Update: 2017-09-11 00:04 GMT

ஜோலார்பேட்டை,

சென்னையிலிருந்து கோவைக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயிலில் ஈரோடு மாவட்டம் பவானி பழனியாண்டவர் நகரை சேர்ந்த அஜில்ரகுமான் என்பவரது மனைவி சம்சாத்பேகம் (வயது 53), தனது மகனுடன் முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 5 பெட்டியில் பயணம் செய்தார். ரெயில் காட்பாடி அருகே வந்தபோது சம்சாத்பேகத்துக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரது மகன் தனது தாயாரை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக டிக்கெட் பரிசோதகர்களை தொடர்பு கொண்டு கூறினார். அவர்கள் காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்து மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினர்.

அதற்குள் ரெயில் காட்பாடியை கடந்து விட்டது. எனவே குடியாத்தம் ரெயில் நிலையத்தில் 108 ஆம்புலன்சை தயாராக வைத்திருக்குமாறு காட்பாடி ரெயில்வே அதிகாரிகள் மூலம் குடியாத்தம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு 108 ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு டாக்டரும் மருத்துவ குழுவினருடன் சிகிச்சை அளிக்க தயாராக இருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு 12.45 மணியளவில் ரெயில் குடியாத்தம் வந்து சேர்ந்தது. எஸ்.5 பெட்டி நிற்கும் இடத்தில் தயாராக இருந்த ஸ்டெச்சரில் சம்சாத்பேகத்தை வைத்து ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்துக்கு பணியாளர்கள் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ரெயிலிலேயே டாக்டர்கள் பணியில் நியமிக்கப்பட்டிருந்தால் அவருக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதன் மூலம் அந்த பெண் உயிர்பிழைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் ரெயிலில் மருத்துவ வசதி இல்லாததால் எவ்வளவோ முயற்சி செய்தும் சம்சாத்பேகம் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இறந்த சம்சாத்பேகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே இனி வருங்காலங்களிலாவது இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க அதிவேக ரெயில்களில் மருத்துவ வசதி செய்ய வேண்டும் என பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்