கவுரி லங்கேஷ் படுகொலை சம்பவம் ஆந்திராவுக்கு சிறப்பு விசாரணை குழுவினர் விரைவு

கவுரி லங்கேஷ் படுகொலை சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் ஆந்திரா மாநிலத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2017-09-10 23:25 GMT

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் கடந்த 5–ந் தேதி மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மர்மநபர்களை பிடிக்க உளவுத்துறை போலீஸ் ஐ.ஜி.யான பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறப்பு விசாரணை குழுவுக்கு கொலையாளிகள் பற்றிய முக்கிய ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆனால் கவுரி லங்கேஷ் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பதே தெரியாமல் உள்ளது. இதனால் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு 5 நாட்கள் ஆகியும் கொலையாளிகளை கைது செய்ய முடியவில்லை. இதற்கிடையில், கவுரி லங்கேஷ் நக்சலைட்டுகள் திருந்தி வாழ்வதற்கு நடவடிக்கை எடுத்ததால், நக்சலைட்டுகள் தீர்த்து கட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல, கவுரி லங்கேசை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி குண்டுகள் நக்சலைட்டுகள் பயன்படுத்துவது போல இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறப்பு விசாரணை குழுவின் ஒரு பிரிவினர் கவுரி லங்கேசை, நக்சலைட்டுகள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில், கொலையாளிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் பாதித்த பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சிறப்பு விசாரணை குழுவின் ஒரு பிரிவினர் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். மேலும் அந்த மாநிலத்தை சேர்ந்த நக்சலைட்டுகள் ஒழிப்பு படை போலீசாருடன் இணைந்து சிறப்பு விசாரணை குழுவினர் கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.

இதற்கிடையில், கவுரி லங்கேஷ் கொலைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்ட மல்லிகார்ஜுன கவுடா என்ற மல்லி அர்ஜூன் (வயது 22) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்