ரூ.7¼ லட்சம் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்

சான்பாடா ரெயில் நிலையத்தில் ரூ.7¼ லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-10 22:51 GMT

மும்பை,

மும்பை துறைமுக வழித்தடத்தில் உள்ள சான்பாடா ரெயில் நிலையத்திற்கு 2 பேர் கள்ளநோட்டுகளுடன் வர உள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் இரவு சான்பாடா ரெயில் நிலையத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக கையில் பைகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது அவர்கள் வைத்திருந்த பைகளில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்தனர். சோதனையில், அவை அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை எண்ணி பார்த்தபோது ரூ.7 லட்சத்து 36 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

கைதானவர்களில் ஒருவர் அந்த கள்ள ரூபாய் நோட்டுகள் வங்கதேசத்தில் அச்சிடப்பட்டவை என்றும், அவற்றை கொல்கத்தாவை சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கிக்கொண்டு வந்ததாக தெரிவித்தார். இன்னொருவர் பெங்களூரை சேர்ந்த ஒருவர் தன்னிடம் மும்பையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும்படி கொடுத்து அனுப்பியதாக கூறினார். இருப்பினும் அவர்களது பெயரை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து கைதான இருவரும் மும்பை எஸ்பிளண்டே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி 2 பேரையும் வருகிற 24–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்