குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்குவதில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்குவதில் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த சங்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2017-09-10 22:45 GMT
நெல்லை,

ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைவர் பால்ரத்தினசாமி, ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

முன்னாள் ராணுவ வீரர்களை அழைத்து குறைகளை கேட்பது போல் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். குடிசை மாற்று வாரிய வீடுகளில், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையங்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சலுகை வழங்குவது போல், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கும் கேண்டீன் வசதி செய்து தர வேண்டும். கோவில் பாதுகாப்பு பணி, எண்ணெய் நிறுவனங்கள், மருத்துவமனை, மின்சார வாரியங்களில் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் அருணாசலம், சொக்கலிங்கம், சுப்பையா, நயினார், முருகேசன், கந்தசாமி, சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்