மடத்துக்குளம் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது தந்தை–மகன் தப்பி ஓட்டம்

மடத்துக்குளம் அருகே சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைதுசெய்தனர். தந்தை–மகன் தப்பி ஓடிவிட்டனர்.

Update: 2017-09-10 22:30 GMT

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் அருகே உள்ள குருவக்களம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜ்கபூருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவர் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்தார்.

அப்போது மதகடி புதூர் நவ்வாலோடை பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தாராபுரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த 3 பேர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார். போலீஸ் விசாரணையில், அவர் குருவக்களம் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 48) என்பதும், தப்பி ஓடியவர்கள் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் (56), அவருடைய மகன் ஆத்திமரத்தான் (35) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அங்கு சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட டிரம் உள்ளிட்ட பொருட்கள், 30 லிட்டர் சாராய ஊறல், 2 லிட்டர் சாராயம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.

மேலும் அந்த பகுதியில் வேறு எங்காவது கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா? சாராய விற்பனையில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளனரா? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து தாராபுரம் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனை கைதுசெய்தனர். பின்னர், அவர் உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மடத்துக்குளத்தை சேர்ந்த வயதான மதுபிரியர் ஒருவர் சாராயம் குறித்து கூறும் போது, இன்று அரசு விற்கும் மதுவில் நிறைய வகை உள்ளன. ஆனால் அவர் சப்பென்று இருக்கிறது. அந்த காலத்திலே கருப்பு சர்க்கரையும், வாழைப்பழத்தையும் ஊறல் போட்டு, சாராயம் காய்ச்சி வடிகட்டி சுத்தமான சரக்கு விற்பாங்க. அதை ஒரு டம்ளர் வாங்கி ‘மடக்குனு குடிச்சா... சுருக்குனு ஏறும்...‘ தெரியுமா! ஆனால், கலப்போக்கில் பணத்துக்கு ஆசைப்பட்டு, பேட்டரி கட்டை, நவச்சாரம்... என்று எதையெல்லாமோ போட்டு காய்ச்சி நல்ல சாராயத்தை கள்ள சாராயமாக மாற்றி விட்டனர். எதை குடிச்சாலும், குடல் வெந்து சாவது உறுதி!. ஆனாலும் பாழாய் போன குடியை விட முடியவில்லை‘ என்று கூறினார்.

மேலும் செய்திகள்