கம்பம் உழவர்சந்தையில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகள் பொதுமக்கள் புகார்
கம்பம் உழவர்சந்தையில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் காய்கறிகள் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்து இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
கம்பம்,
விவசாயிகள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய கம்பத்தில் கடந்த 2000–ம் ஆண்டு உழவர்சந்தை தொடங்கப்பட்டது. இந்த உழவர்சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகம் உள்ளது. இதனால் விற்பனையிலும், காய்கறி வரத்திலும் தமிழகத்திலுள்ள 150 உழவர்சந்தைகளில் முதல் பத்து இடத்திலும், தேனி மாவட்டத்தில் முதலிடத்தையும் இது பெற்றுள்ளது.
கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கம்பம் உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
மேலும் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு 10 கடைகள் ஒதுக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த உழவர் சந்தைக்கு தமிழக– கேரள எல்லைப்பகுதியான கம்பம்மெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர்.
இந்த உழவர்சந்தையில் தினமும் சுமார் 30 டன் காய்கறிகள் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இந்த நிலையில் சந்தையில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு மேல் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். இன்னும் சிலர் நடைபாதையில் காய்கறி மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் காய்கறிகள் வாங்க முடியாமல் சிரமப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்களிடம் கேட்ட போது, ‘கடந்த 6 மாதங்களாகியும் உழவர்சந்தையில் காலியாகவுள்ள நிர்வாக அலுவலர் பணி நிரப்பபடாமல் உள்ளது. உதவி நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இப்பிரச்சினை சம்பந்தமாக பல முறை உதவி நிர்வாக அலுவலர்களிடம் புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக கடந்த மாதம் மாவட்ட வேளாண் வணிகத்துறை துணை இயக்குனரிடம் புகார் கூறினோம். இதையடுத்து நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டது. அதன் பின்பு சில வாரங்கள் கழித்து மீண்டும் அப்பகுதியில் காய்கறி மூட்டைகளையும், கடைகளையும் வைத்து விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இதனால் காய்கறி வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே சந்தையில் நடைபாதையில் உள்ள கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.