ஆண்டிப்பட்டி நகரில் திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள் தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

ஆண்டிப்பட்டி நகரில் குடியிருப்பு பகுதியில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

Update: 2017-09-10 22:00 GMT

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி நகரில் அரசு மருத்துவமனை மற்றும் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், காயங்களுக்கு கட்டப்படும் துணிகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகளை திறந்தவெளியில் பொது இடங்களில் கொட்டக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற மருத்துவக்கழிவுகளை அழிப்பதற்காக நடத்தப்படும் நிறுவனத்தில் தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவக்கழிவுகளை அழிக்கும் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனைகளுக்கு வந்து மருத்துவக்கழிவுகளை பாதுகாப்போடு எடுத்து செல்கின்றனர்.

ஆனால் ஆண்டிப்பட்டி நகரில் செயல்படும் சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக்கழிவுகளை சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிகளில் திறந்தவெளியில் கொட்டி வருகின்றனர். வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பையுடன் மருத்துவக்கழிவுகளும் குவிந்து கிடக்கின்றன.

சில தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் இதுபோன்ற செயலால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், மழைக்காலங்களில் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளில் கொட்டப்படும் பயன்படுத்தப்பட்ட ஊசியின் பாதிப்புகள் குறித்து அறியாத சிறுவர்கள் அதனை எடுத்து விளையாடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

எனவே ஆண்டிப்பட்டி நகரில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடக்காதவாறு மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்