‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய ஆசிரியை சபரிமாலாவிற்கு பொன்முடி எம்.எல்.ஏ. ஆதரவு

திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் சபரிமாலா. இவர் ஒலக்கூர் ஒன்றியம் வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றினார்.

Update: 2017-09-10 23:00 GMT

விழுப்புரம்,

திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகாந்தன் மனைவி சபரிமாலா. இவர் ஒலக்கூர் ஒன்றியம் வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றினார். இவர் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் தனது ஆசிரியர் பணியை கடந்த 7–ந் தேதி ராஜினாமா செய்தார். அதன் பிறகு 8–ந் தேதி ஆசிரியை சபரிமாலா தனது வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று சபரிமாலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தார்.

இந்த நிலையில் நேற்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ஆசிரியை சபரிமாலாவை பொன்முடி எம்.எல்.ஏ. சந்தித்து ஆதரவு தெரிவித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பொன்முடி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், அரசு பணி கிடைப்பதே அரிதாக உள்ள காலகட்டத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாநில பட்டியலில் கல்வி வர வேண்டும் என்பதற்காகவும் 9 ஆண்டு காலம் பணியாற்றிய ஆசிரியை, தனது பணியை கொள்கைக்காக ராஜினாமா செய்திருப்பது அவரது போராட்ட குணம். இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அவரது கோரிக்கை வெற்றி பெற தி.மு.க.வும், தமிழக மக்களும் துணை நிற்பார்கள் என்றார். அப்போது ராதாமணி எம்.எல்.ஏ., நகர செயலாளர் கபிலன், முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணன், நிர்வாகிகள் நமச்சிவாயம், ரவி, வசந்தா, துரை, காளிதாஸ், கதிரேசன், அமராபதி உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்