அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி சிதம்பரம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி சிதம்பரம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் 12-வது நாளாக நடைபெற்றது.

Update: 2017-09-10 23:00 GMT
சிதம்பரம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்லூரியில் மருத்துவம்(எம்.பி.பி.எஸ்), பல் மருத்துவம் (பி.டி.எஸ்) படிக்கும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

இது குறித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், இவர்களது கோரிக்கைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களது போராட்டம் தீவிரமடைந்ததால் மருத்துவக்கல்லூரியில் இளநிலை பிரிவில் எம்.பி.பி.எஸ். படிக்கும் (முதலாம் ஆண்டு தவிர்த்து) மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறைவிடப்பட்டது. மேலும் மாணவர்களை விடுதியில் இருந்து காலி செய்யும் படியும் கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியது.

ஆனால் மாணவ-மாணவிகள் விடுதியை காலி செய்யாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்றுமுன்தினம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இவர்களது போராட்டம் நேற்று 12-வது நாளாக நீடித்தது. இதில் மருத்துவக்கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் தங்களது விடுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே காலவரையற்ற விடுமுறை விடுபட்ட இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று(திங்கட்கிழமை) முதல் மீண்டும் தொடக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) ஆறுமுகம் அறிவித்தார்.

இது குறித்து மாணவர்களிடம் கேட்டபோது, வகுப்புகள் தொடங்கப்பட்டாலும், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் எங்களது கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நாளை (அதாவது இன்று திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மேலும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கவும் உள்ளோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்